பிரான்ஸிற்கான இலங்கைத் தூதுவர் தயான் ஜயதிலக்க அமெரிக்காவின் CIA புலனாய்வுப் பிரிவின் உளவாளி என இலங்கை வெளிவிவகார அமைச்சின் மேலதிக செயலாளர் ஷேனுகா செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையின் பரிந்துரைகள், சர்வதேச ரீதியாக எழுந்துள்ள அழுத்தங்கள் குறித்து அரசின் சிரேஷ்ட அதிகாரிகளுக்கு தெளிவுபடுத்தும் விசேட கூட்டமொன்று நேற்று (02) அலரி மாளிகையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட சிரேஷ்ட அரச அதிகாரிகள் சிலரம் ஷேனுகா செனவிரத்ன இதனைத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அரசியல் செயற்பாடுகளுக்கு எதிராக இராஜதந்திர சேவையில் பணியாற்றுபவர்கள் யார் என்பது குறித்தும் ஷேனுகா இதன்போது தகவல் வெளியிட்டுள்ளார்.
தயான் ஜயதிலக்கவை, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ விரைவில் இலங்கைக்கு அழைக்கவுள்ளார். அத்துடன், ஜெனீவாவில் இலங்கை தோல்வியடைய ஜெனீவாவிற்கான இலங்கைத் தூதர் தமரா குணநாயகத்தின் செயற்பாடுகளும் காரணமாக இருந்ததாகவும் ஷேனுகா இதன்போது தெரிவித்துள்ளார்.
தற்போது அரசாங்கம் மீது மக்கள் நம்பிக்கை இழந்துவருவதால், அதனைக் கட்டியெழுப்புவதற்கு அரச அதிகாரிகள் அர்ப்பணிப்புடன் செயலாற்ற வேண்டுமென ஜனாதிபதியின் செயலாளர் இதன்போது கோரிக்கை விடுத்தார்.
இங்கு உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸின் உரை 45 நிமிடங்கள் நீடித்ததும். இந்த உரையில் முக்கியமாக, ஜெனீவாவில் இலங்கை தோல்வியடையவில்லை என்பதையே அவர் வலியுறுத்தியிருந்தார்.
இத்துடன், இலங்கைக்கு எதிராக வாக்களித்த ஐரோப்பிய நாடுகளிலுள்ள தூதுரக அலுவலகங்களை அகற்றிக்கொள்ளப் போவதாகவும், ஆதரவாக வாக்களித்த நாடுகளில் இலங்கைத் தூதரகத்தை புதிதாக நிறுவப்படும் எனவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இதன்போது தெரிவித்துள்ளார்.



