Lanka News Web

பசில் ராஜபக்‌ஷவை இந்தியா ''விகடகவி''யாக பயன்படுத்துகிறது - மகிந்த ராஜபக்‌ஷ!

  • PDF

தனது சகோதரரான பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்‌ஷவை, விகடகவியாக்கியுள்ளதாக (Joker) ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் ஜெனீவா யோசனைக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்தன் பின்னர், இலங்கை - இந்தியா இடையில் ஏற்பட்டுள்ள விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனைக் களைந்து இராஜதந்திர உறவுகளைப் பலப்படுத்திக் கொள்வதற்கு இந்தியா செல்ல அனுமதிக்குமாறு அமைச்சர் பசில் ராஜபக்‌ஷ, ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவிடம் அனுமதி கோரியுள்ளார். எனினும், இதற்கு அனுமதிவழங்க ஜனாதிபதி மறுத்துவிட்டதாக அலரி மாளிகைத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜெனீவா வாக்கெடுப்பிற்கு முன்னர் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், இந்தியா, இலங்கைக்கு எதிராக எந்தச் சந்தர்ப்பத்திலும் வாக்களிக்காது எனவும், அவ்வாறு நெருக்கடி ஏற்பட்டாலும் இந்தியா வாக்களிப்பில் கலந்துகொள்ளாதிருக்குமே தவிர எதிராக வாக்களிக்காது எனவும், இதனை இந்திய உயர் மட்டத் தரப்பினருடன் தனக்கிருக்கும் செல்வாக்கைப் பயன்படுத்தி உறுதிப்படுத்த முடியும் எனவும் அமைச்சர் பசில் ராஜபக்‌ஷ தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், இந்தியா செல்ல பசில் ராஜபக்‌ஷ அனுமதி கோரிய சந்தர்ப்பத்தில், அமைச்சரவையில் தெரிவித்த கருத்துக்களை ஜனாதிபதி ஞாபகப்படுத்தியுள்ளார்.

இதனையடுத்து அமைச்சர் பசில் ராஜபக்‌ஷ வாயடைத்துப் போயுள்ளார். அத்துடன், இந்தச் சந்தர்ப்பத்தில் இந்தியா எந்தவொரு ராஜபக்‌ஷவுடனும் நெருக்கமாக செயற்படத் தயார் இல்லை எனவும், தேவையெனில் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸை டெல்லிக்கு அனுப்பிவைக்குமாறும் இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலய பிரதிநிதிகள் தன்னிடம் தெரிவித்ததாகவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ, அமைச்சர் பசில் ராஜபக்‌ஷவிற்குத் தெரிவித்துள்ளார்.