''நான் ஒரு பௌத்தன். பௌத்தத்திற்கு அமைய எதிரியை நண்பனாக்கிக் கொள்வதையே செய்ய வேண்டும். அத்துடன் இருக்கும் நண்பர்களை நெருக்கமாக்கிக் கொள்ளவேண்டும். எனினும், இன்றைய செயற்பாடுகள் இதற்கு தலைகீழாகவே இருக்கின்றன. இவற்றை சரிசெய்துகொள்வதற்கான ''இராஜதந்திர அறிவை'' நாம் பெற்றுக்கொள்ளும் போது காலம் கடந்துவிடும்'' என அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அத்துடன் ''தன்னைச் சுற்றியுள்ள மக்களின் நலன்கருதியும், தன்னை நம்பியுள்ள மக்களின் நலன் கருதியுமே சிறந்த பௌத்தர்கள் நடந்துகொள்வார்கள். எனினும், இவ்வாறான நன்நெறிகள் மறந்து, மறைந்து போயுள்ள காலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் நாம் செய்யவேண்டிய மிகச்சிறந்த பணி மௌனமாக இருப்பது மாத்திரமே. எனினும், இந்த மௌனத்தை யாரும் பிழையாக கணிப்பிடக் கூடாது'' எனவும் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.
கொழும்பு மியூசியஸ் கல்லூரியில் கடந்த 25ஆம் திகதி நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.





