ஜனாதிபதியுடன் முரண்பட்டு அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்த ஆறுமுகன் தொண்டமனை மீண்டும் அரசாங்கத்தில் இணைந்துகொள்வதற்கான முயற்சியில் தற்போது பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ களமிறங்கியுள்ளார்.
இதன் ஒருகட்டமாக அமைச்சர் தொண்டமானுக்கு வழங்கப்பட்ட கால்நடை வள அபிவிருத்தி அமைச்சின் பணிகளுக்கு மேலதிக நிதியை வழங்க பசில் ராஷபக்ஷ முன்வந்துள்ளார்.
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் முத்துசிலிங்கத்துடன் நேற்று மாலை (27) பேச்சு நடத்திய அமைச்சர் பசில் ராஜபக்ஷ இதற்கான இணக்கத்தை வெளியிட்டுள்ளார்.
இதன்முதற்கட்டமாக டெஸ்ம் கென்டக்டிங் ஏ.எஸ். என்ற டென்மார்க் நிறுவனத்தின் ஊடாக மில்கோ நிறுவத்தின் பால் உற்பத்தி மையத்தை நவீனமயப்படுத்த 33.7 மில்லியன் யூரோவைப் பெற்றுத்தருவதாக பசில் ராஜபக்ஷ உறுதிவழங்கியுள்ளார்.
வெளிநாட்டு சொத்துக்கான டென்மார்க் இறக்குமதி நிதியத்திலிருந்து 33.7 மில்லியன் யூரோவை நிதித் திட்டமிடல் அமைச்சின் ஊடாக வழங்குவதாக இணக்கம் காணப்பட்டுள்து.
மேலும், அமைச்சர் தொண்டமான் நிர்வாகத்திலுள்ள நிறுவனங்களின் தலைவர் உள்ளிட்ட உயர் பதவிகளுக்கான நியமனங்களை தொண்டமானுக்குத் தேவையான வகையில் மேற்கொள்ளுமாறும் கூறியுள்ளார். இதில் அரசாங்கத்தின் எவ்வித தலையீடும் இருக்காது எனவும் உறுதி வழங்கப்பட்டுள்ளது.
தான் ஜனாதிபதியுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் பின்னர் இந்த இணக்கப்பாட்டிற்கு ஜனாதிபதி உடன்பட்டதாக அமைச்சரவையிலுள்ள அமைச்சர்கள் சிலரிடம் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானை அரசாங்கத்தில் மீள் இணைத்துக்கொள்வதற்காக பிரதியமைச்சர் நிருபமா ராஜபக்ஷவின் கோடீஸ்வர வர்த்தகர் திரு நடேசனின் உதவியும் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அத்துடன், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் சில அதிகாரிகளின் உதவியையும் அரசாங்கம் நாடியுள்ளது.





