பலகோடி ரூபா மோசடியில் ஈடுபட்ட ஶ்ரீலங்கா கடற்படையின் முகாமைத்துவப் பணிப்பாளர் ரியல் அட்மிரல் மகேஸ் குணசேகரவை அந்தப் பதவியில் நீடிக்கச் செய்வதற்கான முயற்சிகளை ஜனாதிபதியின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ முன்னெடுத்து வருகிறார்.
இலங்கை கடற்படையின் செயற்பாடுகளை மேற்பார்வை செய்துவரும் ஷிரந்தி ராஜபக்ஷ, மோசடியில் ஈடுபட்ட மகேஸ் குணசேகரவைப் பாதுகாக்க முன்வந்தமைக்கான காரணம் ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல எனத் தெரியவருகிறது.
அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் வேண்டுகோளுக்கமையவே, ஷிரந்தி ராஜபக்ஷ இவரைப் பாதுகாத்து வருகிறார்.
கடந்த காலங்களில் இலங்கைக் கடற்படைக்கு இராணுவத் தளபாடங்களைக் கொள்வனவு செய்த போது பலகோடி ரூபா மோசடி செய்துள்ளதாக விசாரணைகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த ஊழல் மோசடிக் குற்றச்சாட்டுக்கு மேலதிகமாக மேலும் பல முறைப்பாடுகள் இந்த அதிகாரி மீது சுமத்தப்பட்டுள்ளது.
இதனால், இராஜினாமா கடிதத்தை தாமாக வழங்கிவிட்டு பதவியிலிருந்து விலகிச் செல்லுமாறு கடற்படைத் தளபதி இந்த அதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளார்.
தனக்கு ரியல் அட்மிரலாகவே விலகிச் செல்ல அனுமதியளித்தால் தாம் பதவியை இராஜினாமா செய்வதாக குறித்த அதிகாரி கடற்படைத் தளபதிக்குத் தெரிவித்துள்ளார்.
எனினும், இதற்கு எவ்வகையிலும் இடமளிக்க முடியாது என கடற்படைத் தளபதி தெரிவித்துள்ளார்.
எனினும், இதிலிருந்து தப்பித்துக் கொள்வதற்கு மகேஸ் குணசேகர, தனது உறவினரான அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் உதவியை நாடியுள்ளார். இதனையடுத்து அமைச்சர் கெஹெலிய, ஜனாதிபதியின் பாரியாரின் உதவியை நாடியுள்ளார்.
மகிந்த ராஜபக்ஷவின் இளையபுதல்வர் யோசித்த ராஜபக்ஷ இந்த விடயத்தில் நேரடி தலையீடு மேற்கொண்டுள்ளார். இதனடிப்படையில், மகேஸ் குணசேகர பாதிக்கப்படாத வகையில் நடந்துகொள்ளுமாறு ஷிரந்தி ராஜபக்ஷ, பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த நிலையில், கடற்படைத் தளபதி விசாரணைக்காக நியமித்த குழு இரத்துச் செய்யப்பட்டு, மகேஸ் குணசேகர மீதான குற்றச்சாட்டுக்களை விசாரிக்க மூவர் அடங்கிய முப்படை அதிகாரிகளின் குழுவொன்றை பாதுகாப்புச் செயலாளர் நியமித்துள்ளார்.
பாதுகாப்புச் செயலாளரினால் நியமிக்கப்பட்ட இந்தக் குழுவினால், மகேஸ் குணசேகரவை நிபந்தனைகள் இன்றி விடுவிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.





