Lanka News Web

வெல்லப்பிட்டிய பொலிஸ் நிலைய முன்னாள் பொறுப்பதிகாரிக்கெதிராக குற்றப் பத்திரிகை தயாராகிறது!

  • PDF

வெல்லப்பிட்டிய பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரியும், தற்போது பொலிஸ் தலைமையகத்திற்கு மாற்றப்பட்டுள்ள பொலிஸ் அத்தியட்சகர் எஸ்.ஏ.ஆர். சமரநாயக்கவிற்கு எதிராக குற்றப் பத்திரிகையொன்று தயாரிக்கப்பட்டு வருகிறது.

உயர் அதிகாரிகளினால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை நடைமுறைப்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்தக் குற்றப் பத்திரிகை தயாரிக்கப்பட்டு வருவதாக பொலிஸ் தலைமையகத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெல்லப்பிட்டிய பிரதேச மக்களினால் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட வெள்ளைவேனில் இருந்த இராணுவ அதிகாரிகளை உடனடியாக விடுவிக்குமாறு பொலிஸ் உயர் அதிகாரிகள் உத்தரவிட்டிருந்தனர். எனினும், இந்த உத்தரவை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி அவர்களை விடுவிக்கவில்லை. இந்தக் குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே குற்றப் பத்திரிகை தயாராகி வருகிறது.

சந்தேக நபர்கள் குறித்து எவ்விதப் பதவியையும் மேற்கொள்ள வேண்டாம் என நுகேகொட பிரதேசத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆர்.எஸ்.டி.பி. சில்வா, உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஸ்.ஆர்.கே. சொய்ஸா ஆகியோர் முன்னதாக வெல்லப்பிட்டிய பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரிக்கு உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளனர்.

கொழும்பு பிராந்தியத்திற்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் அநுர சேனாநாயக்கவின் ஆலோசனைக்கமையவே இந்த உயர் அதிகாரிகளை உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளனர்.

எனினும், இந்த உத்தரவுகளை பொலிஸ் நிலைய முன்னாள் பொறுப்பதிகாரி கருத்திற்கொள்ளவில்லையென தற்போது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

வெல்லப்பிட்டிய நகர சபைத் தலைவரை கடத்திச் செல்வதற்காக பாதுகாப்புச் செயலாளரின் உத்தரவின் பேரில் வெள்ளைவேனில் இராணுவத்தினர் சென்றிருந்த போதும் பொதுமக்களினால் சிறைபிடிக்கப்பட்டனர். இதுகுறித்த ஆதாரபூர்வமான தகவல்களை இதற்கு முன்னர் எமது இணையத்தளத்தில் வெளியிட்டிருந்தமை நினைவூட்டத்தக்கது.