நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகள் நாட்டைக் காட்டிக்கொடுக்கும் சூழ்ச்சித் திட்டம் எனவும், அந்த ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் அமெரிக்க டொலர்களுக்கு நாட்டைக் காட்டிக் கொடுத்துள்ளதாகவும் பிரசாரமொன்றை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகத் தரப்புத் தகவல்கள் மூலம் அறியமுடிகிறது.
ஆணைக்குழுவின் உறுப்பினர்களான ரொஹான் பெரேரா, பலிஹக்கார ஆகியோரை இலக்கு வைத்தே இந்தப் பிரசாரம் முன்னெடுக்கப்படவுள்ளது.
தேசிய சுதந்திர முன்னிணயின் தலைவரும், அமைச்சருமான விமல் வீரவங்சவிடம் இதற்கான பொறுப்பை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஒப்படைத்துள்ளார்.
நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறு பிரேணையொன்றை சமர்ப்பித்து அமெரிக்கா மேற்கொண்டுவரும் அழுத்தங்களை சமாளிப்பதற்காகவே ஜனாதிபதி இந்த முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
நல்லிணக்க ஆணைக்குழு மீதான நம்பிக்கையை சீர்குலைத்தால் அமெரிக்காவின் பிரேரணை மழுங்கடிக்கப்படும் என விமல் வீரவங்ச ஜனாதிபதி யோசனை தெரிவித்துள்ளார். இதனையடுத்தே ஆணைக்குழு மீதான நம்பிக்கையை சீர்குலைக்க நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் விமலுக்கு, ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இதற்கமைய, நல்லிணக்க ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் இதற்கு முன்னர் இராஜதந்திர சேவையில் ஈடுபட்டிருந்த போது, வெளிநாட்டு புலனாய்வுப் பிரிவினர், அரச சார்பற்ற பிரதிநிதிகள் ஆகியோருடன் நெருங்கி பணியாற்றியவர்கள் என்பதை மையப்படுத்தி விமல் வீரவங்ச இந்த சேறுபூசும் பிரசாரத்தை முன்னெடுக்கவுள்ளார்.
அத்துடன், அமெரிக்காவின் தேவைக்கேற்பவே நல்லிணக்க ஆணைக்குழு உறுப்பினர்கள் இறுதி அறிக்கையைத் தயாரித்துள்ளதாக தமக்குத் தகவல் கிடைத்துள்ளதாகவும் மகிந்த ராஜபக்ஷ, விமல் வீரவங்சிடம் கூறியுள்ளார்.
இந்த நிலையில், நல்லிணக்க ஆணைக்குழுவிற்கு எதிராக பெளத்த மக்கள் மத்தியில் கருத்துப் பரப்பும் பணியை பௌத்த பிக்குகள் சிலரிடம் ஒப்படைக்கலாம் என விமல் வீரவங்ச, ஜனாதிபதியிடம் யோசனை முன்வைத்துள்ளார். இதன் முதற்கட்டமாக ஜாதிக்க ஹெல உறுமயவின் எல்லாவல மேதானந்த தேரரவைப் பயன்படுத்தி ஆணைக்குழுவிற்கு எதிராக கருத்தைப் பரப்பி, பின்னர் மாநாயக்க பீடாதிபதிகளின் கருத்தைப் பெற்றுக்கொள்ளலாம் எனவும் விமல் வீரவங்ச கூறியுள்ளார்.
இதுகுறித்து ஊடக அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி, விமல் வீரவங்சவிற்கு அறிவித்துள்ளார். அதன்பின்னர் குறித்த அறிக்கையை எல்லாவல மேதானந்த தேரர் ஊடாக வெளியிடுமாறு, அரச மேலதிக செய்திப் பணிப்பாளர் ஜெனரல் சந்திரபால லியனகேவிற்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
நல்லிணக்க ஆணைக்குழுவின் உறுப்பினர் பலிஙக்கார, வெளிவிவகார அமைச்சின் செயலாளராகவும், ஐ.நா.விற்கான இலங்கையின் பிரதி வதிவிடப் பிரதிநிதியாகவும், வெளிநாடுகள் பலவற்றில் இலங்கைத் தூதுவராகவும் பணியாற்றிய இராஜதந்திரி என்பது குறிப்பிடத்தக்கது.
நல்லிணக்க ஆணைக்குழுவின் இன்னுமொரு உறுப்பினரான ரொஹான் பெரேரா, வெளிவிவகார அமைச்சின் சட்ட ஆலோசகராக 30 வருடங்கள் பணியாற்றிய இராஜதந்திரி ஆகும்.
இவர்கள் இருவரை மையப்படுத்தியே சேறுபூசும் பிரசாரத்தை முன்னெடுக்க மகிந்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.





