முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகோல்லாகமவை தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்திற்கு அழைத்துவந்து மீண்டும் வெளிவிவகார அமைச்சர் பதவியை வழங்க பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக நம்பகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன.
யுத்தம் நடைபெற்ற காலத்தில் சர்வதேசத்தை மெளனிக்கச் செய்து, பாதுகாப்புச் செயலாளரின் யுத்த முன்னெடுப்புக்களுக்கு பூரண ஆதரவைப் பெற்றுக்கொடுத்ததுடன், வடக்கின் அபிவிருத்திப் பணிகளுக்கும் ரோகித்த போகொல்லாகம உதவியதாக கோதாபய ராஜபக்ஷ நெருக்கிய சிலரிடம் தெரிவித்துள்ளார்.
இதனால், ரோகித்த போகோல்லாகமவை மீண்டும் நாடாளுமன்றத்திற்குள் கொண்டுவரப்படுவது அவசியம் எனவும் கோதாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
சர்வதேசத்தின் மத்தியில் தற்போது எழுந்துள்ள சவால்களுக்கு மத்தியில் வெளிவிவகார அமைச்சர் ஜீல்.எல்.பீரிஸ், வெளிவிவகார அமைச்சின் மேற்பார்வையாளர் சஜின்வாஸ் குணவர்தன எம்.பி. ஆகியோரது நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதியிடம் தனது அதிருப்தியை வெளியிட்டுள்ள கோதபாய ராஜபக்ஷ, ரோகித்த போகொல்லாகம போன்ற ஒருவரை வெளிவிவகார அமைச்சராக நியமிக்குமாறு அண்மையில் கோரியிருந்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து அரசாங்கத்துடன் இணைந்து கொண்ட மிலிந்த மொரகொட, ரோகித்த போகோல்லாகம ஆகியேரே பாதுகாப்புச் செயலாளருக்கு அரசியல் ரீதியாக மிகவும் நம்பிக்கையானவர்களாக செயற்பட்டு வருவதாக ஆளும் தரப்பின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்தார்.





