நாளை ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் பங்கேற்க இலங்கையில் இருந்து சென்றுள்ள அமைச்சர்கள் மத்தியில் பிளவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமைச்சர்கள் உள்ளிட்ட 52 பேர் கொண்ட பெரியதொரு குழுவை இலங்கை ஜெனிவாவுக்கு அனுப்பி வைத்துள்ள நிலையிலேயே அங்கு, உள்முரண்பாடுகள் வெடித்துள்ளன.
இந்தக் கூட்டத்தொடரில் இலங்கை ஜனாதிபதியின் சிறப்புத் தூதுவராக பங்கேற்கும் அமைச்சர் மகிந்த சமரசிங்க, தன்னை ஓரம் கட்டியுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், இலங்கை ஜனாதிபதி செயலக மூத்த அதிகாரியிடம் முறையிட்டுள்ளார்.
அத்துடன் மகிந்த சமரசிங்கவினால் மேற்கொள்ளப்படும் வேலைகள் தொடர்பாக தனக்குத் தெரியப்படுத்தப்படுவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
முன்னதாக இலங்கை வெளிவிவகார அமைச்சரே ஜெனிவா கூட்டத்தில் உரையாற்றுவதாக இருந்தது.
பின்னர் மகிந்த சமரசிங்கவிடம் இந்தப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது ஜி.எல்.பீரிசுக்கு விசனத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த மோதல் ஜெனிவாவில் உள்ள இலங்கை தூதரகம் மற்றும் ஜெனிவாவில் உள்ள ஐ.நாவுக்கான தூதரகத்தில் பணியாற்றும் அதிகாரிகளிடையேயும் விரிவடைந்துள்ளது.
இலங்கை வெளிவிவகார அமைச்சின் மேலதிக செயலர் சேனுகா செனிவிரத்னவை, ஜி.எல்.பீரிஸ் ஜெனிவாவுக்கு அழைத்துச் சென்றது குறித்து ஐ.நாவுக்கான இலங்கை தூதுவர் தாமர குணநாயகம் அதிருப்தியடைந்துள்ளார்.
தாமராவுக்கு முன்னதாக, சேனுகாவே ஜெனிவாவில் பணியாற்றியிருந்தார்.
இவர்கள் இருவருக்கும் இடையிலான மோதலை அடுத்து பெண் அதிகாரிகளை ஜெனிவா குழுவில் சேர்க்க வேண்டாம் என்று இலங்கை ஜனாதிபதி கூறியதாகவும், ஆனாலும் சேனுகாவை அதில் உள்ளடக்கியது குறித்து பீரிஸ் மீது அவர் விசனமடைந்துள்ளதாகவும் ஆங்கில ஊடகம் ஒன்று குறிப்பிட்டுள்ளது.





