எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டதற்கு எதிராக சிலாபத்தில் மீனவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட மீனவத் தொழிலாளியின் குடும்பத்தை மெளனிக்கச் செய்ய அரசாங்கம் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
உயிரிழந்த மீனவத் தொழிலாளியின் வீட்டிற்குச் சென்ற ஆளும் தரப்பின் அரசியல்வாதியொருவர் குடும்பத்தாருக்கு ஐந்து லட்சம் ரூபா காசோலையொன்றை வழங்கியுள்ளார். எனினும், இதனை ஏற்றுக்கொள்ள குடும்பத்தினர் மறுத்துவிட்டனர்.
மீனவத் தொழிலாளியின் இறுதிக் கிரியைகளுக்கான செலவுகளையும், குழந்தைகள் இருவரதும், மனைவியினதும் எதிர்காலத்தையும் அரசாங்கம் பொறுப்புக்கொள்வதாகவும் குறித்த அரசியல்வாதி கூறியுள்ளார். அத்துடன், இறுதிக் கிரியைகள் முடியும்வரை குடும்பத்தாரை மௌனம் காக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த மீனவத் தொழிலாளியின் குடும்பத்தார், அரசியல்வாதியையும், அவருடன் வந்த சகாக்களையும் அங்கிருந்து விரட்டியடித்துள்ளனர்.
இறுதிச் சடங்குகள் இன்றைய தினம் நடைபெறுகின்ற நிலையில் தற்போது சிலாபம் நகரம் முழுமையாக இராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.






