ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் களனி தொகுதி அமைப்பாளர் பதவியிலிருந்து அமைச்சர் மேர்வின் சில்வாவை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
களனி தொகுதியில் கட்சிக்குள் ஏற்பட்ட நெருக்கடிக்குத் தீர்வு காண்பதற்காக அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு இதுகுறித்து ஒழுக்ககாற்று விசாரணைகளை நடத்துமாறு ஜனாதிபதி உத்தரவிட்டிருந்தார்.
இதற்கமைய அமைக்கப்பட்ட ஒழுக்காற்று விசாரணைகளைக் குழு தமது பணிகளை முன்னெடுத்துள்ளதுடன் இதுகுறித்த தீர்மானத்தையும் இறுதி செய்துள்ளது.
இதற்கமைய ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் களனி தொகுதி அமைப்பாளர் பதவியிலிருந்து அமைச்சர் மேர்வின் சில்வாவை நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழு மேற்கொண்ட விசாரணைகளுக்கமைய அமைச்சர் மேர்வின் சில்வாவிற்கு எதிராக முன்வைக்கப்பட்ட ஏராளமான குற்றச்சாட்டுக்கள் நிருபிக்கப்பட்டுள்ளன. அத்துடன், அமைச்சர் மேர்வின் சில்வாவுடன் இணைந்து களனி பிரதேச சபை உறுப்பினர்கள் மேற்கொண்டுவந்த சட்டவிரோத நடவடிக்கைகள் பலவும் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.
இந்தத் தீர்மானத்திற்கு அமைய அமைச்சர் மேர்வின் சில்வா தண்டிக்கப்பட வேண்டும் என்பதே விசாரணைக் குழுவின் உறுப்பினர்களான அமைச்சர், மைத்திரிபால சிறிசேன, டளஸ் அழகப்பெரும ஆகியோர் உறுதியாக உள்ளதாகவும் தெரியவருகிறது.





