Lanka News Web

யாழில் இராணுவ ஆட்சியே நடக்கிறது! சோசலிச கட்சி

  • PDF

சுவரொட்டிகளை ஒட்டிக் கொண்டிருந்தபோது, உலக சோசலிச கட்சியின் உறுப்பினர்கள் இராணுவத்தினராலும், இராணுவப் புலனாய்வாளர்களாலும் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் அக்கட்சி தனது கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளதுடன், வடக்கில் இராணுவத்தினரின் கொடுங்கோலாட்சி நடந்து கொண்டிருப்பதாகவும் சாடியுள்ளது.

நேற்று மாலை யாழ்.நகரில் குறித்த கட்சியினர் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு அக்கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

இது தொடர்பில் இந்த சந்திப்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,

எதிர்வரும் 29ம் திகதி தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கூட்டமொன்றை நடத்துவதற்கு தீர்மானித்திருந்தோம், இதற்கான சுவரொட்டிகளை ஒட்டிக் கொண்டிருந்தபோது.

யாழ்.சின்னக்கடை பகுதியில் வைத்து இராணுவத்தினர் அவர்களை கைது செய்துள்ளனர்.

பின்னர் விசாரணை செய்வது போன்று பாவனை செய்து கொண்டு பின்னர் விடுவித்து விட்டு சிவிலுடையில் பின்தொடர்ந்து வந்த படையினர் பிரதான வீதி தண்ணீர்த்தாங்கிக்கு அருகில் வைத்து அவர்கள் மீது கடுமையான தாக்குதல் நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.

மேலும் கூட்டம் நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டிருந்த வீரசிங்கம் மண்டபத்தின் பொறுப்பாளரிடம் சென்ற சிலர் தம்மை புலனாய்வாளர்கள் என அடையாளப்படுத்திக் கொண்டதுடன், அரசாங்கத்தினர் அல்லாதவர்களுக்கு மண்டபத்தை வாடகைக்கு கொடுக்க கூடாது என எச்சரித்துள்ளதுடன், நாம் பொலிஸாரிடமும், இராணுவத்தினரிடமும் கூட்டத்திற்கான முன் அனுமதியை பெறவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

ஒரு ஜனநாயக நாட்டில் பதிவு செய்யப்பட்ட கட்சியொன்று கூட்டத்தை நடத்துவதற்கும், சுவரொட்டிகளை ஒட்டுவதற்கும் அனுமதி பெறவேண்டிய அவசியம் கிடையாது. இந்த நிலையில் பொலிஸாரிடமும், இராணுவத்தினரிடமும் அனுமதி பெறவேண்டுமென்றால் இங்கு நடப்பது இராணுவத்தினரதும், பொலிஸாரினதும் ஆட்சியே.

மேலும் இந்த நிலையை பலப்படுத்திக் கொள்வதற்கே யுத்தம் முடிந்துவிட்டது பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டு விட்டது என தெரிவித்துக் கொண்டு இராணுவத்தினரின் செயற்பாட்டை அரசாங்கம் அதிகரித்துக் கொண்டிருக்கின்றது. எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.