ஊடகவியலாளர் பிரகீத் ஹெக்நேலியகொட கடத்திச் செல்லப்பட்டு, கிழக்கு மாகாணத்தில் இரகசியமான இடமொன்றில் தடுத்து வைக்கப்பட்ட பின்னர் கொலை செய்யப்பட்டதாக இத்தாலிக்கு தப்பிச் சென்றுள்ள பாதாள உலகக் குழுவின் உறுப்பினரான பிரதீப் என்பவர் தகவல் வெளியிட்டுள்ளார்.
அரசாங்கத்தின் முக்கிய ஆதரவாளரான பிரதீப், பாதாள உலகக்குழுக்களுக்கு எதிரான நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்ட பின்னர், இலங்கையில் இருந்து தப்பிச் சென்றார்.
எவ்வாறாயினும், ஊடகவியலாளர் பிரகீத் ஹெக்நேலியகொட காணாமல் போய் நேற்று 24ஆம் திகதியுடன் இரண்டு வருடங்கள் பூர்த்தியாகிவிட்டது.
அவர் காணாமல் போன சம்பவம் குறித்து நடத்தப்பட்டு வருவதாக கூறப்படும் விசாரணைகளில் இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லை என்பதும் இந்த சம்பவம் தொடர்பாக எவரும் இதுவரை கைதுசெய்யப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில், ஐக்கிய நாடுகளின் சித்திரவதைக்கு எதிரான குழுவின் முன் கருத்து வெளியிட்டிருந்த முன்னாள் சட்டமா அதிபரும் தற்போதைய அமைச்சரவை ஆலோசகருமான மொஹான் பீரிஸ், ஹெக்நேலியகொட வெளிநாடு ஒன்றில் தஞ்சமடைந்துள்ளதாக கூறியிருந்தார்.
இந்த தகவலை உறுதிப்படுத்துமாறு, குடும்பத்திரும், ஊடக அமைப்புகளும், அரசாங்கத்திற்கு பகிரங்கமாக சவால் விடுத்திருந்த போதிலும், அரசாங்கம் இதற்கு இதுவரை எந்த பதிலையும் வழங்காது மௌனம் காத்து வருகிறார்.





