Lanka News Web

பிளாஸ்டிக் கூடை கொடுக்கல் வாங்கலைப் பகிரங்கப்படுத்தப் போவதாக அமைச்சர் ஜொன்ஸ்டனுக்கு அச்சுறுத்தல்

  • PDF

பிளாஸ்டிக் கூடைகளுக்கு பதிலாக கழற்றி வைக்க கூடிய பிளாஸ்டிக் கூடைகளை கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்காது போனால், தமது நிறுவனத்துடன் மேற்கொண்ட கொடுக்கல் வாங்கல்கள் குறித்து பகிரங்கப்படுத்த போவதாகப் பிளாஸ்டிக் கூடைகளை தயாரிப்போர், உள்நாட்டு வர்த்தகம் மற்றும் கூட்டுறவு அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவை அச்சுறுத்தியுள்ளதாக தெரியவருகிறது.

காய்கறி மற்றும் பழங்களை எடுத்துச் செல்ல கட்டாயமாக பிளாஸ்டிக் கூடைகளை பயன்படுத்த வேண்டும் என ஜோன்ஸ்டன் அறிமுகப்படுத்தி புதிய சட்டத்திற்கு நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் மற்றும் அவற்றை எடுத்துச் செல்லும் போக்குவரத்தாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், ஜனாதிபதி தலையிட்டு, அந்த சட்டம் அமுல்படுத்துவதை ஒரு மாதகாலத்திற்கு ஒத்திவைத்தார்.

இந்த ஒரு மாதம் முடிந்த பின்னர், பிளாஸ்டிக் கூடைகளுக்குப் பதிலாக மடித்து வைக்க கூடிய பிளாஸ்டிக் கூடைகளை அறிமுகப்படுத்த உள்நாட்டு வர்த்தக அமைச்சு தீர்மானித்துள்ளது. இந்த தீர்மானம் தொடர்பில், பிளாஸ்டிக் கூடை உற்பத்தியாளர்கள் அமைச்சரிடம் தமது கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.

ஏற்கனவே பிளாஸ்டிக் கூடை உற்பத்தியாளர்கள் 8 லட்சத்திற்கும் அதிகாமான கூடைகளை உற்பத்தி செய்துள்ளனர். இதில் 5 லட்சம் கூடைகள் உள்நாட்டு வர்த்தக அமைச்சின் கீழ் இயங்கும் கூட்டுறவு மொத்த விற்பனை கூட்டுத்தாபனத்தினால் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன.

ஒரு பிளாஸ்டிக் கூடை ஆயிரத்து 500 ரூபாவுக்கு கொள்வனவு செய்யப்பட்டுள்ளதுடன், இந்த விலையில் 25 வீதத்தை அரசாங்கம், பிளாஸ்டிக் கூடை உற்பத்தியாளர்களுக்கு மானியமாக வழங்கியுள்ளது. இந்த மானியங்கள் அமைச்சின் ஊடக அரசாங்கம் ஏற்கனவே வழங்கிவிட்டது.

அதிகளவான கூடைகளை பீனிக்ஸ் பிளாஸ்டிக் உற்பத்தி நிறுவனம் வழங்கியுள்ளதுடன் நில்கமால் நிறுவனம் அதிகமான கூடைகளை விநியோகித்துள்ளது.

எவ்வாறாயினும், உள்நாட்டு வர்த்தக அமைச்சினால் கொள்வனவு செய்யப்பட்ட அனைத்து கூடைகளுக்கும் தலா 200 ரூபா வீதம் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு அந்த நிறுவனங்கள் வழங்கியுள்ளதாகவும் இதனால் தமக்கு கிடைத்த அரச மானியம் தமக்கு கிடைக்கவில்லை எனவும் அது அமைச்சருக்கே கிடைத்திருப்பதாகவும் அந்த நிறுவனங்கள் கூறியுள்ளன.

இதனால், அமைச்சர் வழங்கிய உறுதிமொழிகளை மீறி செயற்பட்டால், அனைத்து தகவல்களையும் ஊடகங்களுக்கு வழங்க போவதாக அந்த நிறுவனங்கள் எச்சரித்துள்ளதாக இந்த தகவல்களை வழங்கிய பிளாஸ்டிக் உற்பத்தி நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.