Lanka News Web

முல்லேரியாவைப் போன்றதொரு சம்பவம் நீர்கொழும்பிலும் இடம்பெறும் அச்சநிலை

  • PDF

கொழும்பு - முல்லேரியா பிரதேசத்தில் கடந்த 08ஆம் திகதி இடம்பெற்ற கூட்டமைப்புத் தலைவர்களிடையிலான மோதலைப் போன்ற நிலை நீர்கொழும்பிலும் விரைவில் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பழம்பெரும் உறுப்பினரும், நீர்கொழும்பு தொகுதி அமைப்பாளரும், பிரதியமைச்சருமான சரத் குணரத்னவிற்கும், ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்ட மாகாண சபை உறுப்பினர் நிமல் லன்ஸாவிற்கும் இடையிலான உட்பூசல் தற்போது பாரிய மோதலாக உருவெடுத்துள்ளது.

சரத் குணரத்ன ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நீர்கொழும்பு தொகுதி அமைப்பாளராக பதவி வகித்த போதிலும், கம்பஹா மாவட்டத்தின் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும், பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பசில் ராஜபக்‌ஷவின் முழு ஆதரவுடன் நிமல் லன்ஸா பல்வேறு கட்சி செயற்பாடுகளை அவர் விருப்பத்திற்கு நீர்கொழும்பு பிரதேசத்தில் முன்னெடுத்து வருகிறார்.

இதுகுறித்து பிரதியமைச்சர் சரத் குணரத்ன ஜனாதிபதியின் கவனத்திற்குப் பல முறை கொண்டுவந்துள்ள போதிலும் அதற்கு உரிய பதில் எதுவும் கிடைக்கவில்லையென சரத் குணரத்ன தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலை தற்போது மேலும் மோசமடைந்து இவருக்கிடையிலான நேரடி மோதல்கள் ஏற்படும் நிலை உருவாகியுள்ளதால் விரைவில் முல்லேரியாவைப் போன்றதொரு சம்பவம் நீர்கொழும்பிலும் இடம்பெறலாம் என்ற அச்ச நிலை ஏற்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சித் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.