Lanka News Web

கூட்டமைப்பின் பிரசாரப் பணிகள் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன

  • PDF

கொழும்பு மாநகர சபைத் தேர்தலில் போட்டியிடும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர்களின் பிரசாரப் பணிகள் இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

தேர்தல் பிரசாரப் பணிகளுக்கான பொறுப்பு பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்‌ஷவிடம் வழங்கப்பட்டுள்ளதுடன் அவர் அந்தப் பணிகளில் கஜபா படைப் பிரிவின் படையினரைப் பயன்படுத்தி வருகிறார்.

WPJJ - 9907 என்ற இலக்கத் தகடுகளைக் கொண்ட பஸ் ஒன்றும் ஆறு ஜீப் வண்டிகளும் முன்னணியின் தேர்தல் பிரசாரச் சுவரொட்டிகளை ஒட்டுவதற்குப் பயன்படுத்தப்படுவதுடன் எதிர்க்கட்சியினரின் சுவரொட்டிகளைக் கிழித்து எறியவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இதுசம்பந்தமாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஹப்புஆராச்சியிடம் கேட்டபோது, தாம் அவ்வாறான பணிகளை இராணுவத்தினரை ஈடுபடுத்துவதில்லையெனக் கூறியுள்ளார்.

பஸ்ஸின் இலக்கத்தைக் கூறியபோது, தான் கூறுவதை ஏற்க முடியாது என்றால் தன்னால் எதனையும் தெரிவிக்க முடியாது என இராணுவப் பேச்சாளர் கூறியுள்ளார்.

தனக்குத் தெரிந்த விடயங்களை மாத்திரமே தான் கூறுவதாகவும் அதனைவிட தன்னிடம் வேறு எதனையும் கேட்க வேண்டாம் எனவும் அதன்மூலம் எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை எனவும் ஹப்புஆராச்சி கூறியுள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் பாதுகாப்புத் தரப்பினரின் இலக்கத் தகடுகளைக் கொண்ட வாகனங்கள், ஜீப் வண்டிகள் என பல வாகனங்கள் அரசாங்கத்தின் தேர்தல் பிரசாரங்களுக்காக பயன்படுத்தப்பட்டதுடன் அவற்றில் சீருடை அணிந்த படையினரும் இருந்தனர்

இதுகுறித்து இராணுவப் பேச்சாளர் அறிந்திருக்கவில்லை என்ற போதிலும் அவ்வாறு இருக்குமானால் தேர்தல் ஆணையாளரிடம் இதுகுறித்து முறைப்பாடு செய்யுமாறும் கூறியுள்ளார்.