அண்மையில் நடைபெற்ற வெளிநாட்டிலுள்ள இலங்கை இராஜதந்திரிகள் செயலமர்வை இரண்டு பிரதான அதிகாரிகள் கலந்துகொள்ளவில்லையென வெளிவிவகார அமைச்சின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
பிரான்ஸிற்கான இலங்கைத் தூதுவர் கலாநிதி தயான் ஜயதிலக, ஜெனீவாவிற்கான முன்னாள் இலங்கைத் தூதுவரும், கியூபாவிற்கான தற்போதைய தூதுவருமான தமரா குணநாயகம் ஆகியோரே இந்த மாநாட்டிற்கு சமூகமளிக்கவில்லை.
வெளிநாடுகளில் பணியாற்றும் அனைத்து இலங்கை இராஜதந்திர அதிகாரிகளும் இந்த செயலமர்வில் கலந்துகொள்வது கட்டாயமாக்கப்பட்டிருந்தது. எனினும், தயான் ஜயதிலக, தமரா குணநாயகம் ஆகியோர் திட்டமிட்டவகையில் இந்த செயலமர்வில் கலந்துகொள்ளவில்லை எனவும், இதற்கான காரணத்தைக்கூட அறியத்தரவில்லையெனவும் வெளிவிவகார அமைச்சின் அதிகாரி மேலும் தெரிவித்தார்.
ஜெனீவாவிற்கான இலங்கைத் தூதுவர் பதவியிலிருந்து அகற்றப்பட்டிருந்த தமரா குணநாயகம், ஊடகங்களிடம் கருத்து தெரிவித்திருந்தபோது, இதன்பின்னர் இலங்கை அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எந்தவொரு இராஜதந்திர பதவிகளையும் வகிக்கப் போவதில்லையெனக் கூறியிருந்தார்.
இவ்வாறு தெரிவித்து இரண்டு வாரங்கள் செல்வதற்கு முன்னர் கியூபாவிற்கான இலங்கைத் தூதுவராக பதவியேற்றிருந்தார்.
அத்துடன் கலாநிதி தயான் ஜயதிலக்க, இலங்கையின் எந்தவொரு வெளிநாட்டு இராஜதந்திரியையும் பொருட்படுத்துவதில்லை எனவும், ஜனாதிபதிக்கும், இவருக்கும் இடையிலான நெருக்கத்தினாலேயே தயான் இவ்வாறு நடந்துகொள்வதாகவும் எமக்குத் தகவல் தந்த அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.





