மன்னார் நீதவானை தகாத வார்த்தைகளினால் திட்டி அச்சுறுத்திய அமைச்சர் ரிஷாட் பதியூதீன், மன்னார் ஆர்ப்பாட்டத்தை நேரடியாக வழிநடத்தியதாக தெரியவருகிறது.
ஆர்ப்பாட்டக் காரர்கள் நீதிமன்றத்தின் மீது கல்வீசி தாக்குதல் நடத்திய போது அதனை மன்னார் தல்லடி இராணுவ முகாமில் இருந்தே வழிநடத்தியுள்ளார்.
விடத்தல் தீவு மீனவக் கிராமத்தில் தமிழ் மீனவர்களின் வீடுகள் மீது தாக்குதல் நடத்தி, சேதப்படுத்திய சம்பவம் தொடர்பாக கடந்த 16ஆம் திகதி சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் ஆதரவாளர்கள் சிலர் மன்னார் நீதவான் நீதிமன்றில் கடந்த 17ஆம் திகதி ஆஜர்படுத்தப்பட்டனர்.
விடத்தல்தீவு மீனவக் கிராமத்தில் முஸ்லிம், தமிழ் மீனவரிடையே ஏற்பட்ட மோதலை அடுத்தே தமிழ் மீனவர்கள் வீடுகள் சில தாக்கப்பட்டன.
இந்தச் சம்பவத்தில் தலையிட வேண்டும் எனக் கூறி, பாதுகாப்புச செயலாளரின் விசேட உத்தரவின் கீழ் பெற்றுக்கொண்ட விமானப்படைக்குச் சொந்தமான ஹெலிகொப்டர் மூலம் ரிஷாட் பதியூதீன் கடந்த 18ஆம் திகதி காலை தல்லடி இராணுவ முகாமிற்குச் சென்றுள்ளார்.
இந்தச் சந்தர்ப்பத்தில் சுமார் ஆயிரம் முஸ்லிம் மீனவர்கள் மன்னார் நீதவான் நீதிமன்றம் முன்பாக கூடியிருந்தனர்.
இவர்கள் நீதிமன்றத்திற்கு அருகில் வருவதைத் தடுப்பதற்காக வீதித் தடைகளைப் போடுவதற்கு பொலிஸார் முயற்சித்தனர். எனினும், அமைச்சர் பதியூதீனின் உத்தரவின் பேரில் அந்த முயற்சி முறியடிக்கப்பட்டது.
ஆர்ப்பாட்டக்காரர்கள் நீதிமன்றத்திற்கு அருகில் வந்து ஆர்ப்பாட்டம் நடத்த இடையூறு செய்ய வேண்டாம் பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக மன்னார் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நீதிமன்றத்திற்கு மிக அருகில் வந்த ஆர்ப்பாட்டக் காரர்கள் நீதிமன்றத்தின் மீது கற்களை வீசுவதையும் பொலிஸார் தடுக்க முயற்சிக்கவில்லை.
மன்னார் தலைமையகப் பொலிஸ் அத்தியட்சகர், அமைச்சர் பதியூதீனின் சகாக்களுடன் இணைந்து கண்டி பிரதேசத்திற்கு மீன்களை அனுப்பிவைக்கும் வர்த்தகத்தை மேற்கொண்டு வருகிறார். இதனாலேயே பொலிஸாருக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பபட்டதாக மேலும் தெரியவருகிறது.
நீதிமன்றத்தின் மீது கற்களை வீசிய ஆர்ப்பாட்டக்காரர்கள் சிலர் பொலிஸாரை நோக்கியும் சில கற்களை வீசியுள்ளனர். இதனால் மன்னார் தலைமையக பொலிஸ் அத்தியட்சகர் தலுவத்தவும் காயமடைந்துள்ளார்.
இதன்பின்னரே ஆர்ப்பாட்டக் காரர்களைக் கலைப்பதற்கு கண்ணீர்ப் புகைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாகவும் அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மன்னார் பிரதேசத்தில் பொலிஸ், இராணுவ அதிகாரிகள் மீனவர்களுடன் இணைந்து மீன் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளனர். அத்துடன், பாதுகாப்பு நெருக்கடிகளின்போது மீன் லொறிகளை விடுவிப்பதற்காக கப்பமும் பெற்று வருகின்றனர். இவை மன்னாரில் தற்போது வழமையாக நடைபெற்று வருவதாகவும் இந்தத் தகவல்களை தந்த தரப்பினர் தெரிவித்தனர்.





