Lanka News Web

பிரதமர் பதவி அநுர யாப்பாவிற்கு?

  • PDF

எதிர்வரும் அமைச்சரவை மாற்றத்தின் போது பிரதமர் பதவியை ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரான அநுர பிரியதர்ஷன யாப்பாவிற்கு வழங்குவது குறித்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ ஆராய்ந்து வருவதாக அலரி மாளிகைத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

தற்போதைய பிரதமர் டி.எம். ஜயரத்ன அண்மைக்காலமாக நோய்வாய்ப்பட்டிந்த நிலையில் அவர் தற்போது பழைய துடிப்புடன் பணியாற்றும் நிலையில் இல்லை என்பதால் பிரதமர் பதவிக்கு அடுத்ததாக யாரை நியமிப்பது என்பதை ஜனாதிபதி ஆராய்ந்து வருகிறார்.

சாதகமான பிரதமர் ஒருவரை நியமிக்கும் நெருக்கடியை ஜனாதிபதி எதிர்நோக்கியுள்ளதால் அமைச்சரவை மாற்றத்தையும் பல முறை ஒத்திவைத்துவிட்டார்.

நாமல் ராஜபக்‌ஷவின் அரசியல் எதிர்காலத்திற்கு பாதகத்தை ஏற்படுத்தாத ஒருவரை பிரதமராக நியமிக்கவே ஜனாதிபதி நீண்டநாட்களாக திட்டமிட்டு வருகிறார். இதனால் பாரிய சவால்களை இந்த விடயத்தில் மகிந்த எதிர்நோக்கியுள்ளதாகவும், இதனடிப்படையிலேயே அநுர பிரியதர்ஷன யாப்பாவை நியமிக்கலாமா என ஜனாதிபதி தற்போது ஆராய்ந்து வருவதாகவும் அலரி மாளிகைத் தரப்பின் அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கம் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களில் ரத்னசிறி விக்ரமநாயக்க, டி.எம்.ஜயரத்ன, நிமல் சிறிபால டி சில்வா, மைத்திரபால சிறிசேன, ஜோன் சேனவிரத்ன ஆகியோரைத் தவிர சிரேஷ்ட உறுப்பினராகக் கருதப்படுவது அநுர பிரியதர்ஷன யாப்பா ஆவார்.

எவ்வாறாயினும், அடுத்த அமைச்சரவை மாற்றத்தின் போது பிரதமர் பதவியைப் பெற்றுக்கொள்ளும் எதிர்பார்ப்பிலுள்ள பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்‌ஷ, தற்போது பாரிய அரசியல் நகர்வுகளை முன்னெடுத்து வருவதாகவும் அறிய முடிகிறது.