Lanka News Web

முன்னாள் பொலிஸ்மா அதிபரின் மனைவி தூதரக அலுவலகத்தில் உடுதுணி வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளார்!

  • PDF

முன்னாள் பொலிஸ்மா அதிபரும், பிரேசிலுக்கான இலங்கைத் தூதுவருமான கலாநிதி மகிந்த பாலசூரியவின் மனைவி ஆஷா பாலசூரிய பிரேசிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் துணிக் கடையொன்றைத் திறந்திருப்பதாக தூதரகத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மகிந்த பாலசூரிய பொலிஸ்மா அதிபராக பதவி வகித்த காலம் முதல் பல மோசடி வர்த்தகர்களடன் இணைந்து வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த ஆஷா பாலசூரியவை பொலிஸ் திணைக்கள அதிகாரிகள் ''சீனியர் ஐ.ஜி.பி.'' என்ற புனைப் பெயரிலேயே அழைத்துள்ளனர்.

இலங்கையிலிருந்து வரிகளைச் செலுத்தாது, தூதரக வரப்பிரசாதங்களைப் பயன்படுத்தி இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் உடுதுணிகளை பிரேசிலுக்குத் தருவித்துக் கொள்ளும் ஆஷா பாலசூரிய, பிரேசிலுள்ள இலங்கைத் தூதரக அலுவலகத்தின் வளங்களைப் பயன்படுத்தி அங்கு ''உடுதுணி வியாபாரத்தை'' முன்னெடுத்து வருவதாக எமக்குத் தகவல் அந்த அதிகாரி தெரிவித்தார்.

அத்துடன், தூதரகத்தில் பணியாற்றும் அனைவரையும் தன்னிடம் உடுதுணிகளைக் கொள்வனவு செய்யுமாறு ஆஷா பாலசூரிய அழுத்தம் கொடுப்பதாகவும் அந்த அதிகாரி குறிப்பிட்டார்.

இதுகுறித்து இலங்கை வெளிவிவகார அமைச்சின் சிரேஷ்ட அதிகாரியொருவரிடம் கேட்டபோது, தூதரக அலுவலகங்களில் தூதரக வளங்களைப் பயன்படுத்தி பாரிய வர்த்தக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக பல நாடுகளிலிருந்து பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும், இதுகுறித்து விசாரணைகள் நடத்தப்படுவதாகவும், இந்த முறைப்பாடுகளிலுள்ள தகவல்கள் உறுதிப்படுத்தப்படுமாயின் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.