Lanka News Web

கொமர்ஷல் வங்கியில் நிதி மோசடிக்கு தயாராகும் ஹூனுகல்ல - மகிந்த கூட்டணி?

  • PDF

கொமர்ஷல் வங்கியின் ஊடாக ராஜபக்‌ஷர்கள் பாரிய நிதி மோசடியொன்றுக்குத் தயாராகின்றனரா என்ற சந்தேகம் வலுத்துள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவின் ஓய்வுபெற்ற சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்தார்.

இதற்காக நிதி மோசடியாளரான லக்ஸ்மன் ஹூனுகல்லவைப் பயன்படுத்துவதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

அந்த அதிகாரி மேலும் தகவல் தருகையில்,

லக்ஸ்மன் ஹூனுகல்லவை ஜனாதிபதி தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி கொமர்ஷல் வங்கியின் பணிப்பாளர்களில் ஒருவராக பதவியமர்த்தியுள்ளார்.இதன் ஊடாக கொமர்ஷல் வங்கியின் நிதி இரகசியங்களைப் பெற்று, இந்த பாரிய நிதிமோசடிக்கு திட்டமிடப்படுகிறதா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிதியத்திற்கு ரவி வெத்தசிங்க அனுப்பிய 80,000 ஸ்ரேலின் பவுண்ட் நிதியில், 50 லட்சம் ரூபாவை அந்நாள் மீன்பிடித்துறை அமைச்சர் மகிந்த ராஜபக்‌ஷவிற்கு வழங்கியதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நடத்திய விசாரணையின் போது லக்ஸ்மன் ஹூனுகல்ல சாட்சியமளித்திருந்தார்.

இந்த நிதியில் மேலும் 15 லட்ச ரூபா ஏ.எச்.எம். பெளசிக்கு வழங்கப்பட்டதாகவும், 80,000 ஸ்ரேலின் பவுண்ட் மோசடி குறித்த குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசாரணைகளில் இருந்து தெரியவந்தது. கடந்த காலம் முதலே லக்ஸ்மன் ஹூனுகல்லவின் நிதி மோசடிகளுடன் மகிந்த ராஜபக்‌ஷவிற்கு தொடர்பிருப்பது இதன்மூலம் உறுதியானது.

இதனால் கொமர்ஷல் வங்கியின் பணிப்பாளர் சபையில் லக்ஸ்மன் ஹூனுகல்லவை ஜனாதிபதி நியமித்தமையானது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

சர்ச்சைக்குரிய செனல் 9 ஊழல் மோசடி குறித்த விசாரணைகளின்போது லக்ஸ்மன் ஹூனுகல்லவை கைதுசெய்ய வேண்டாம் என மகிந்த ராஜபக்‌ஷவும், மங்கள சமரவீரவும் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு அழுத்தம் கொடுத்திருந்தனர்.

இதுகுறித்து ''சண்டே ரைம்ஸ்'' பத்திரிகைகூட தகவல்களை வெளியிட்டிருந்தது எனவும் ஓய்வுபெற்ற குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரி தெரிவித்தார்.

லக்ஸ்மன் ஹூனுகல்லவிடமிருந்து 50 லட்சம் ரூபாவைப் பெற்றுக்கொண்டமை குறித்து அந்நாள் மீன்பிடித்துறை அமைச்சர் மகிந்த ராஜபக்‌ஷவிடம் ஊடகங்கள் கேட்டபோது, அந்த நிதியை 1999ஆம் ஆண்டு வடமேல் மாகாண சபைக்காக அந்த நிதியை செலவிட்டதாகக் கூறியிருந்தார்.

எனினும், அந்தத் தேர்தலில் மகிந்த ராஜபக்‌ஷவின் பங்களிப்பு பெரிதாக இருக்கவில்லை எனவும், இந்த மாகாண சபையின் ஒரேயொரு தேர்தல் தொகுதிக்கு மாத்திரமே மகிந்த ராஜபக்‌ஷ பொறுப்பதாக இருந்ததாகவும் அறியமுடிகிறது.