Lanka News Web

தமிழ்க் கூட்டமைப்பை வசப்படுத்தித் தருவதாக பசில் ராஜபக்‌ஷ, மகிந்தவிற்கு உறுதி!

  • PDF

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மீண்டும் பேச்சுவார்த்தைக்கு மேசைக்கு கொண்டுவந்து அரசாங்கத்துடன் இணக்கப்பாடொன்றைக் காண வழி ஏற்படுத்தித் தருவதாக அமைச்சர் பசில் ராஜபக்‌ஷ, ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவிற்கு உறுதிவழங்கியுள்ளார்.

இதற்கமைய அமைச்சர் பசில் ராஜபக்‌ஷவின் தலையீட்டின் கீழ் பிரபல தமிழ் வர்த்தகர் சிலருக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இரண்டு பிரதிநிதிகளுக்கும் இடையே சில சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன.

இந்த பேச்சுக்களுக்கமைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சாதகமான பதில் கிடைத்துள்ளதாகவும், இதுகுறித்து இந்திய இராஜதந்திரிகளுக்கு அறிவிப்பதற்கு அமைச்சர் பசில் ராஜபக்‌ஷ விரைவில் இந்தியா செல்லவுள்ளதாகவும் தெரியவருகிறது.

எவ்வாறாயினும், இதுகுறித்து நாம் ஆராய்ந்த போது, இவ்வாறான பேச்சுக்கள் குறித்து எதுவும் தெரியாது என தமிழ்க் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் தெரிவித்துவிட்டனர்.

அரசாங்கத்துடன் நடத்தப்பட்ட பேச்சுக்கள் தோல்வியடைந்ததை அடுத்து, எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடி, ஒருங்கிணைந்த வேலைத் திட்டமொன்றுக்கான யோசனைத் திட்டமொன்றை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டதாகவும், எனினும், இதற்கு ஜனாதிபதி இதுவரை சாதகமான பதில் எதனையும் வழங்கவில்லை எனவும் கூட்டமைப்பு பிரதிநிதிகள் தெரிவித்தனர்.