கடந்த காலங்களில் நாடு முழுவதும் இடம்பெற்ற வெள்ளை வான் கடத்தல் சம்பவங்கள் தொடர்பாக பத்திரிகை ஒன்று பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸவிடம் கேள்வி எழுப்பிய போது, வெள்ளை வான்களில் கடத்தப்படுபவர்கள் குற்றவாளிகள் இல்லையா என பாதுகாப்பு செயலாளர் அந்த பத்திரிகையிடம் மறுகேள்வி எழுப்பியுள்ளார்.
வெள்ளை வான்களில் கடத்திச் செல்லப்படுபவர்கள் யார்? 10, 15 பேரை துஷ்பிரயோகம் செய்தவர்கள். 10,15 பேரை கொலை செய்தவர்கள். கொள்ளையர்கள் வெளியில் சுதந்திரமாக நடமாடும் போது, அவர்களை எந்த விதத்திலாவது சமூகத்தில் இருந்து இல்லாமல் செய்தாலும் அந்த தவறையும் பாதுகாப்புச் செயலாளர் மீதே சுமத்துகின்றனர். பல்வேறு காரணங்களினால் குற்றவாளிகள் சமூகத்தில் இருந்து இல்லாமல் செய்யப்படுகின்றனர்.
இந்த குற்றவாளிகள் சமூகத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட்ட பின்னர், அரசாங்கத்திற்கு எதிராகவே குற்றம் சுமத்துகின்றனர். பாதாள உலக குழுக்கள் தற்போது இல்லை. பாதாள உலக குழுவினர் எந்தவிதத்திலாவது இல்லாமல் செய்யப்பட்டால், அதற்கான குற்றத்தையும் பாதுகாப்புச் செயலாளர் மீதே சுமத்துகின்றனர். அது தவறானது.
கொழும்பு மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் பாலியல் துஷ்பிரயோகம் செய்த, பாதாள உலக செயற்பாடுகளை மேற்கொண்ட, போதைப் பொருள் விற்ற சிலர் சமூகத்தில் இருந்து இல்லாமல் செய்யப்பட்டனர். இவை எப்படி நடந்தன என்பது தெரியவில்லை. நாட்டில் குற்றவாளிகள் ஒழிக்கப்பட்டால், அதில் தவறுகளை காண்பார்கள் என்றால், அப்படியான கேள்விகளுக்கு எப்படி பதிலளிக்க முடியும் எனவும் கோத்தபாய ராஜபக்ஸ கூறினார்.





