அவுஸ்திரேலியாவிற்கான இலங்கைத் தூதுவர் திசர சமரசிங்கவை நாடு கடத்த வேண்டுமென அந்நாட்டு க்ரீன் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லீ ரியன்னன் கருத்துத் தெரிவித்துள்ளார்.
திசர சமரசிங்கவுக்கு எதிராக மேலும் கருத்துத் தெரிவித்த அவுஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர்,
இலங்கைத் தூதுவர் மீது யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இறுதிக் கட்ட யுத்தம் இடம்பெற்ற காலத்தில் திசர சமரசிங்க, இலங்கைக் கடற்படையினருக்கு தலைமை தாங்கினார்.
உயர்ஸ்தானிகர் திசர சமரசிங்கவிற்கு எதிரான யுத்தக் குற்றச் செயல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலான விசாரணைகள் முடிவடையவில்லை. இதேவேளை, உயர்ஸ்தானிகர் திசர சமரசிங்கவிற்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.
நான்கு மாதங்களுக்கு முன்னதாகவே திசர சமரசிங்கவிற்கு எதிரான விசாரணைகள் முடிவுறுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர். அவுஸ்திரேலிய கிரீன் கட்சி சிறுபான்மை கட்சி எனவும், அந்தக் கட்சியின் கருத்துக்கள் ஒட்டுமொத்த அவுஸ்திரேலியர்களின் நிலைப்பாடாக அமையாது என அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் பொக் கார் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இந்த விடயம் அவுஸ்திரேலிய ஊடகங்களிலும் அங்குள்ள மக்கள் மத்தியிலும் கவனம் பெற்று வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.



