Lanka News Web

தனித்து தான் போட்டி: முடிவை மாற்றியது முஸ்லிம் காங்கிரஸ்!

  • PDF

இலங்கையில் நடக்கவுள்ள கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தனித்தே போட்டியிடவுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ளது.

ஏற்கனவே ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிடவுள்ளதாக முஸ்லிம் காங்கிரஸ் தரப்பினர் அறிவித்திருந்தனர்.

இந்த நிலையில், மீண்டும் இப்போது முஸ்லிம் காங்கிரஸ் தனது முடிவை மாற்றிக்கொண்டுள்ளது.

தனித்துப் போட்டியிடுவதா, அரசுடன் இணைந்து போட்டியிடுவதா அல்லது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் கூட்டுச்சேர்வதா என்ற முடிவுகளை எடுக்கமுடியாமல் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பலதரப்பு பேச்சுவார்த்தைகளை கடந்த வாரத்தில் நடத்திவந்தது.

நெருக்கடி

கட்சியின் உச்சபீடமும் ஒன்றுக்கு இரண்டு தடவைகூடி, அரசுடன் தான் இணைந்துபோட்டியிட வேண்டும் என்று தீர்மானங்களை எடுத்திருந்ததாக கட்சி வட்டாரங்கள் அறிவித்தன.

எனினும், இந்த தீர்மானம் தொடர்பில் கட்சியின் உயர்மட்டத்துக்குள் தொடர்ந்தும் இழுபறி நீடிப்பதாகவும் அக்கட்சியின் பிரமுகர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், அரசுடன் தேர்தல் உடன்பாடொன்றில் கைச்சாத்திடும் பணி அடுத்த கட்டமாக நடக்கும் என்று கூறிவந்த முஸ்லிம் காங்கிரஸ், தனித்துதான் போட்டி என்று இன்று புதன்கிழமை திடீரென அறிவித்துவிட்டது.

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அங்கம்வகிக்கும் அதாவுல்லா தலைமையிலான தேசியக் காங்கிரஸ், ரிசாத் பதியூதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகியக் கட்சிகளும் முஸ்லிம் காங்கிரஸும் கிழக்கு மாகாணசபை வேட்பாளர் பங்கீடு தொடர்பில் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்திவந்தன.

இந்தநிலையில்,திடீர் திருப்பமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேர்தலில் தனித்துதான் போட்டியிடும் என்றும் மத்தியில் ஆளும் சுதந்திரக் கூட்டமைப்பு ஆட்சியில் தொடர்ந்தும் பங்கெடுக்கும் என்றும் அக்கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் உள்ளூர் ஊடகங்களுக்கு இன்று அறிவித்துள்ளார்.

தேர்தலின்போது அரசாங்கத்துடன் மிக நெருக்கமாக இணைந்து செயற்படவுள்ளதாகவும் ரவூப் ஹக்கீம் கூறியுள்ளார்.

- பி.பி.சி தமிழோசை