மகிந்த ராஜபக்ஷ சகோதர்கள் மீது வெறுப்படைந்துள்ள அரசாங்கத்தில் பலர், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க தலைமையில் புதிய அரசியல் அமைப்பு ஒன்றை ஏற்படுத்த இரகசிய பேச்சுக்களை நடத்தி வருவதாக தெரியவருகிறது.
இதனடிப்படையில் சந்திரிக்காவின் தலையீட்டில், வெள்ளை அலரி என்ற பெயரில் இரகசியமான அமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தப் புதிய அமைப்பில், பொலன்னருவை, பதுளை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த சிரேஷ்ட அரசியல்வாதிகள் இருவர் மேலும் சில சிரேஷ்ட அரசியல்வாதிகளும், முன்னாள் பிரதமர் ஒருவரும் அடங்குவதாகக் கூறப்படுகிறது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னணி உறுப்பினர்கள், பழைய இடதுசாரி கட்சிகளின் பிரதிநிதிகள் பலரும் இந்தக் கூட்டத்தில் கலந்துக்கொண்டுள்ளனர்.
அண்மையில் பதவியை இராஜினாமா செய்த ஜனாதிபதியின் ஆலோசகராக கடமையாற்றிய ஹேமகுமார நாணயக்காரவும் புதிய அரசியல் முன்னணி குறித்து அண்மையில் ஊடகங்களுக்கு தகவல் வெளியிட்டிருந்தார்.
அடுத்த ஜனாதிபதி தேர்தலை இலக்கு வைத்து, இந்த புதிய அரசியல் அமைப்பைக் கட்டியெழுப்பத் தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது. அதேவேளை, 18வது அரசியல் அமைப்புத் திருத்தத்திற்கு அமைய சந்திரிக்கா மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியும் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.





