வெளிநாட்டில் கல்வி பயிலும் ஜனாதிபதியின் புதல்வர் மூவருக்கும் தூதரக அலுவலகங்கள் அனைத்து வளங்களையும், வசதிகளையும் செய்துகொடுக்க தூதுவர்களைப் பயன்படுத்திய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தியதலாவ கருத்தரங்கைப் போல 100 கருத்தரங்குகளை நடத்தினாலும் அதில் எவ்விதப் பயனும் கிடைக்கப் போவதில்லையென இராஜதந்திர அதிகாரியொருவர் தெரிவித்தார்.
ஜனாதிபதியின் புதல்வர்களின் கல்விப் பணிகளைப் பராமரிப்பது மாத்திரம் தான் தூதரக அதிகாரிகளின் கடமையா என இந்தக் கருத்தரங்கில் கலந்துகொண்ட சில இராஜதந்திர அதிகாரிகள் கேள்வியெழுப்பியுள்ளனர்.
வெளிநாட்டு தூதுவர்களின் தலைவர்களுக்காக தியதலாவ இராணுவ அகடமியில் கடந்த வார இறுதியில் நடத்திய கருத்தரங்கில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, வெளிநாட்டுத் தூதரக அதிகாரிகள் மீது பாரிய குற்றச்சாட்டுக்களை சுமத்தியுள்ளார்.
இலங்கைக்கு நற்பெயரை ஏற்படுத்துவதற்காக தூதரக அதிகாரிகள் எதனையும் செய்யவில்லை எனவும் ஜனாதிபதி திட்டித்தீர்த்துள்ளார்.
இதுகுறித்து எமக்கு கருத்துரைத்த வெளிநாட்டு இராஜதந்திர அதிகாரியொருவர், ஜனாதிபதியின் மூத்த புதல்வர் நாமல் ராஜபக்ஷ லண்டனில் உயர் கல்வியைப் பயின்ற சந்தர்ப்பத்தில், அவருக்கான உணவு, உடை, வாகன வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான பொறுப்பை பிரித்தானியாவிற்கான அந்நாள் இலங்கைத் தூதுவர் சேனுகா செனவிரத்னவே ஏற்றிருந்ததாகவும், நாமல் ராஜபக்ஷவின் கையடக்கத் தொலைபேசியின் கட்டணத்தைக்கூட இலங்கைத் தூதரகமே செலுத்தியதாகவும் குறிப்பிட்டார்.
அத்துடன், யோசித்த ராஜபக்ஷ உக்ரெய்னில் கடற்படை அகடமியில் கல்வி பயிலும் சந்தர்ப்பத்தில், அவருக்கான அனைத்துத் தேவைகளையும், அந்நாட்டிற்கான இலங்கைத் தூதுவர் உதயங்க வீரதுங்கவே பூர்த்தி செய்ததாகவம் சுட்டிக்காட்டினார். அத்துடன், யோசித்தவை உக்ரெய்ன் கடற்படை அகடமிக்கு அனுப்புவதற்காகவே அந்நாட்டில் இலங்கைத் தூதுரகத் தூதரகம் திறக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன், யோசித்த இங்கிலாந்தின் சவுத் ஹெம்ப்டன் ரோயல் கடற்படை அகடமியில் இருந்த சந்தர்ப்பத்தில் அவருக்கான செலவுகளை லண்டனிலுள்ள இலங்கைத் தூதரகமே செய்துவந்தது.
ஜனாதிபதியின் இளைய புதல்வர் ரோஹித ராஜபக்ஷ, அமெரிக்காவில் தற்போது பராமரித்து வருவது வொஷிங்டனிலுள்ள இலங்கைத் தூதுவர் ஜாலிய விக்ரமசூரிய என்பதுடன், நாசா அகடமியில் கல்வி பயில்வதற்கான அனைத்து வசதிகளையும், அவர் தங்குவதற்காக வீடொன்றைக் கொள்வனவு செய்து அதற்கான செலவுகளையும் வொஷிங்டனிலுள்ள இலங்கைத் தூதரகமே ஏற்றுள்ளது.
அத்துடன், தூதரகத்தினால் மூன்று வாகனங்கள் யோசித்த ராஜபக்ஷவிற்காக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் எமக்குத் தகவல் தந்த அந்த இராஜதந்திர அதிகாரி தெரிவித்தார்.
அரசாங்கத்தின் தன்னிச்சையான, இறுமாப்பான செயற்பாடுகளே வெளிநாடுகளில் இலங்கையின் பெயருக்கு களங்கம் ஏற்படக் காரணம் எனக் குறிப்பிட்ட அந்த அதிகாரி, வெளிநாடுகளில் இலங்கைக்கு நற்பெயரை ஏற்படுத்துவதற்காக தியதலாவையில் நடத்தப்பட்டதைப் போல 100 கருத்தரங்குகள் நடத்தினாலும் அதனால் எவ்விதப் பயனும் ஏற்படப்போவதில்லை எனவும் குறிப்பிட்டார்.





