பொருளாதார வீழ்ச்சிக்கு நிதியமைச்சின் செயலாளர் பி.பீ.ஜயசுந்தரவே காரணம் என பழிசுமத்தும் வகையில் செய்திகளை வெளியிடுமாறு அரசசார் தனியார் ஊடக நிறுவனங்களின்
இரண்டு ஊடகவியலாளர்களுக்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளார்.
அத்துடன், பி.பீ. ஜயசுந்தரவிற்கு எதிராக சில பிரசாரங்களை முன்னெடுக்குமாறு அமைச்சர்கள் சிலருக்கும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.
நாட்டின் அபிவிருத்திக்கு குந்தகம் ஏற்படுத்தும் அதிகாரிகள் சிலர் இருப்பதாக அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம அண்மையில் தெரிவித்திருந்தமை நினைவூட்டத்தக்கது. ஜனாதிபதியின் ஆலோசனைக்கமையே அமைச்சர் அமுனுகம, பி.பீ. ஜயசுந்தரவை இலக்குவைத்து இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.
கடந்த 03ஆம் திகதி கண்டி கலதாரி ஹோட்டலில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட அமைச்சர் அமுனுகம, இலங்கைக்கு வரும் முதலீடுகள் சில அதிகாரிகளின் செயற்பாடுகளினால் அற்றுப்போவதாகவும், இந்த அதிகாரிகள் வெளிநாட்டு முதலீடுகளை அதிகரிப்பதற்கு பதிலாக வரும் முதலீடுகளையும் விரட்டியடிப்பதாகக் குறிப்பிட்டார். அத்துடன், இந்த அதிகாரிகளின் விபரங்களை விரைவில் பகிரங்கப்படுத்துவதாகவும், இவர்களுக்கெதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுப்பதாகவும் அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும், ஜனாதிபதியின் உறவினரான ஜனாதிபதி அலுவலகத்தின் தலைவர் காமினி சேனரத்திற்கு அடுத்தபடியாக, நிதியமைச்சின் செயலாளரே மகிந்த ராஜபக்ஷவின் நம்பிக்குரியவராக இதுவரை இருந்துவந்துள்ளார்.
எனினும், பி.பீ.ஜயசுந்தரவிற்கெதிராக பலர் தொடர்ச்சியாக குற்றச்சாட்டுக்களை ஜனாதிபதியிடம் சுமத்தி வருவதால் அந்த நம்பிக்கை தற்போது அற்றுப்போயுள்ளதாக ஜனாதிபதி செயலகத்தின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
நிதியமைச்சின் செயலாளர் பி.பீ. ஜயசுந்தரவின பிரதான எதிரிகளாக மத்திய வங்கியின் ஆளுநர் அஜிட்நிவாட் கப்ரால், கெசினோ வர்த்தகரும், போக்குவரத்து அமைச்சின் செயலாளருமான தம்மிக்க பெரேரா ஆகியோரே செயற்பட்டு வருகின்றனர். இவர்கள் இருவரும் கடந்த சில மாதங்களாக நாமல் ராஜபக்ஷவைப் பயன்படுத்தி பி.பீ.ஜயசுந்திரவிற்கெதிராக பல சதித் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
நாமல் ராஜபக்ஷ, பி.பீ.ஜயசுந்தர தொடர்பாக தொடர்ச்சியான முறைப்பாடுகளை செய்ததாலேயே மகிந்த ராஜபக்ஷ, பி.பீ. ஜயசுந்தர மீது வைத்திருந்த நம்பிக்கைக் குறைவதற்கு காரணமாக அமைந்துள்ளது.
அத்துடன், இந்தக் கூட்டணியில் அமைச்சர் விமல் வீரவங்சவும் இணைந்துகொண்டுள்ளார். அரசாங்கத்திலிருந்து பி.பீ.ஜயசுந்தரவை விரட்டியடிக்கும் முயற்சியில் ஆரம்பம் முதலே அமைச்சர் விமல் வீரவங்ச ஈடுபட்டு வருகிறார் என ஜனாதிபதி செயலகத்தின் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.
