
'த ஃபினான்ஸ்' நிறுவனத்தின் பங்குகளை பெறுமதியை அதிகரித்துக் காண்பித்து அதனை தேசிய சேமிப்பு வங்கியினால் கொள்வனவு செய்யவைத்த மோசடியின் சூத்திரதாரி மத்திய வங்கியின் ஆளுநரும், பொருளாதார கொலையாளியுமான
அஜித் நிவாட் கப்ரால் என தற்போது உறுதியாகியுள்ளது என நிதியமைச்சின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்தார்.
இந்தப் பங்குகளைக் கொள்வனவு செய்வதற்கு மத்திய வங்கியின் ஆளுநர், ஜனாதிபதியின் அனுமதியையும் பெற்றுக்கொண்டுள்ளார்.
தேசிய சேமிப்பு வங்கியினால் கொள்வனவு செய்யப்பட்ட 'த ஃபினான்ஸ்' நிறுவனத்தின் ஒரு பங்கின் சந்தைப் பெறுமதி 30 - 32 ரூபாவாகும். எனினும், தேசிய வங்கியினால் இந்தப் பங்குகள் சுமார் 50 ரூபாவிற்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
சம்பத் வங்கி ஊடாக 390 மில்லியன் ரூபா கொடுப்பனவை 'த ஃபினான்ஸ்' நிறுவனத்திற்கு செலுத்த தேசிய சேமிப்பு வங்கி நடவடிக்கை எடுத்திருந்தது.
இதனடிப்படையில் பங்கு உரிமையாளர்களுக்கு சம்பத் வங்கி இந்தப் பணத்தை தற்போது செலுத்தியுள்ளது.
'த ஃபினான்ஸ்' நிறுவனத்தின் பங்குகளில் பெரும்பகுதி ஐவருக்கே சொந்தமாக இருந்தது. இந்த ஐவரில் முக்கியமாக தினால் விஜேமான்ன என்பவரே அதிக பங்குகளை வைத்திருந்துள்ளார். இவர் 2.9 மில்லியன் பங்குகளை வைத்திருந்தார். இதன் பெறுமதி 145.25 மில்லியன் ரூபாவாகும்.
மத்திய வங்கியின் ஆளுநரின் நெருங்கிய சகாவும், அவரது வர்த்தகங்களை மேற்கொள்ளும் நபராகவும் தினால் விஜேமான்ன பங்காற்றி வருகிறார்.
நண்பரின் பங்குகளை விற்பனை செய்வதற்காகவே மத்திய வங்கியின் ஆளுநர் தேசிய சேமிப்பு வங்கியை இந்தக் கொடுக்கல், வாங்கலில் சிக்கவைத்துள்ளார்.
எவ்வாறாயினும், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஆகியோரது பிரத்தியேக, இரகசிய கொடுக்கல் வாங்கல் சிலவற்றை மத்திய வங்கி ஆளுநரே நிர்வகித்து வருவதால் இவருக்கெதிராக ஜனாதிபதி நடவடிக்கை எடுக்கப் போவதில்லை என்பது உறுதியென எமக்கு தகல் தந்த நிதியமைச்சின் சிரேஷ்ட அதிகாரி தெரிவித்தார்.
'த ஃபினான்ஸ்' நிறுவனத்தின் பங்குகளை தேசிய சேமிப்பு வங்கி கொள்வனவு செய்த கொடுக்கல், வாங்கலை ஜனாதிபதி நன்கு அறிந்திருந்தார் என நாம் இதற்கு முன்னரும் பொறுப்புடன் வெளிப்படுத்தியிருந்தோம்.
பிரதம நீதியரசர் கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்க, தேசிய சேமிப்பு வங்கித் தலைவர் பிரதீப் காரியவசத்தின் மனைவியாகும். இந்தக் கொடுக்கல், வாங்கலில், பிரதீப் காரியவசத்தை சிக்கவைத்து, பிரதம நீதியரசரை நெருக்கடிக்குள் தள்ளி, தனது வழிக்குக் கொண்டுவருவதே ஜனாதிபதியின் நோக்கமாக இருந்தது என்பதையும் நாம் இதற்கு முன்னர் சுட்டிக்காட்டியிருந்தோம்.





