Lanka News Web

திலங்கவிற்கு பிரதியமைச்சுப் பதவியொன்று வழங்குமாறு பசில் அழுத்தம்

  • PDF

புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பிரதியமைச்சுப் பதவி வழங்கும் சந்தர்ப்பத்தில் திலங்க சுமதிபாலவிற்கும் பிரதியமைச்சுப் பதவியொன்று வழங்கப்பட வேண்டும் என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்‌ஷ, ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுத்துள்ளார்.

இதற்கு ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் மைத்திரிபால சிறிசேன, கொழும்பு மாவட்டத் தலைவர் சுசில் பிரேம்ஜயந்த ஆகியோரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

எனினும், ஜனாதிபதியிடமிருந்து இதற்கு சாதகமான பதில் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை.

ஜனாதிபதியின் சிரேஷ்ட புதல்வர் நாமல் ராஜபக்‌ஷவிற்கு பிரபல பிரதியமைச்சுப் பதவியொன்றை வழங்கத் திட்டமிட்டுள்ள மகிந்த ராஜபக்‌ஷ, இந்தத் தீர்மானத்திற்கு எதிர்ப்பு கிளம்பாதிருக்க மேலும் சில எம்.பி.க்களுக்கும் பிரதியமைச்சுப் பதவிகளை வழங்கத் திட்டமிட்டுள்ளார்.

இந்த நியமனங்கள் மே மாத இறுதியில் வழங்கப்படவுள்ளன. எனினும், நாமல் ராஜபக்‌ஷவை அரசியலில் முன்னிலைப்படுத்தும் இந்தச் செயல்பாட்டினால் ஆளும் கட்சிக்குள் தற்போது நிலவும் உட்பூசல் மேலும் மோசமடையும் என ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.