வெளிவிவகார அமைச்சின் மேலதிகச் செயலாளர் ஷேனுகா சேனவிரத்ன, அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா குறித்து பல குற்றச்சாட்டுக்களை ஜனாதிபதியிடம் முன்வைத்துள்ளதாக இலங்கை விமானப்படையின் சிரேஷ்ட அதிகாரியொருவர் எம்மிடம் தெரிவித்தார்.
விமானப்படைத் தளபதியின் தந்தை கடந்தவாரம் காலமானார். அந்த இறுதிக் கிரியைகளில் கலந்துகொள்ள ஜனாதிபதி வந்தபோதே, ஷேனுகா இந்த குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்.
இறுதிக் கிரியைகளில் கலந்துகொண்ட ஜனாதிபதி, விமானப்படைத் தளபதியின் குடும்பத்தாருடன் கலந்துரையாடிக் கொண்டிருந்தார். இதன்போது ஷேனுகா செனவிரத்ன ஜனாதிபதியிடம் நெருங்க பல முறை முயற்சித்துள்ளார். எனினும், ஜனாதிபதி இதனை சுதாரித்துக்கொள்ளவில்லை. இவ்வாறு நீண்ட முயற்சிக்குப் பின்னர் ஷேனுகா எதனையோ ஜனாதிபதிக்கு கூற எத்தணிப்பதை அருகில் இருந்தவர்கள் சுதாரித்துக்கொண்டுள்ளனர்.
இதன்போது அவருக்கு ஜனாதிபதிக்கு அருகில் செல்ல ஜனாதிபதியை சூழவிருந்த சிலர் வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர். ஜனாதிபதியை நெருங்கிய ஷேனுகா செனவிரத்ன ''சார் அமைச்சர் நிமல்சிறிபால டி சில்வா இந்தியத் தூதுக்குழுவினரிடம் உங்களைக் காட்டிக்கொடுத்துவிட்டார். சார், நீங்கள் ஒருபோதும் 13ஆவது அரசியலமைப்புத் திருத்ததை நடைமுறைப்படுத்த இடமளிக்கப் போவதில்லை என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இந்தியப் பிரதிநிதிகளிடம் தெரிவித்தார்'' என ஷேனுகா ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.
இதனைக் கூறிய பின்னர் உடனடியாக ஷேனுகா செனவிரத்ன உடனடியாக அங்கிருந்து வெளியேறியுள்ளார்.
இறுதிக் கிரியைகளில் கலந்துகொள்ளவந்த ஒருவர், திடீரென இவ்வாறு வெளியேறிச் சென்றதையும், அரசின் இரண்டாம் நிலை அதிகாரியொருவர் இவ்வாறு நடந்துகொண்டதையும் அங்கிருந்த படை அதிகாரிகளை அதிருப்திக் கொள்ளவைத்ததாக எமக்குத் தகவல் தந்த குறித்த படை அதிகாரி தெரிவித்தார்.





